சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.160   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்

-
தாது சூழுங் குழல்மலையாள்
தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை
வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழும் மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப்
பொய்கை சூழும் பூம்புகலூர்.

[ 1]


தாதுக்களையுடைய மலர்களைச் சூடிய கூந்தலை யுடைய உமையம்மையாரின் தளிர் போன்ற மென்மையான கைக ளால் சுற்றித் தழுவப்பட்ட திருமேனியையும், கங்கை ஆற்றின் சிறப்புடன் சூழ்ந்து விளங்கிடும் தொகுதியான திருச்சடையையும் உடைய பெருமான் விரும்பி வீற்றிருக்கும் பதியாவது, ஒளிமிக்க மணிமுடியை உடைய சோழஅரசர்களின் காவிரியாற்றின் வளஞ் சிறந்த சோழ நாட்டில், மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த குளங்கள் அமைந்துள்ள புகலூர் என்னும் பதியாகும். *** பூம்புகலூர் - அழகிய புகலூர். மலர்கள் நிறைந்த திருக் குளங்களால் சூழப் பெற்று அதன் நடுவிற் பூத்த தாமரையெனத் திருக் கோவில் விளங்குதலின் இப்பெயர் பெற்றது என்றலுமாம். இது நன்னிலத்தின் கிழக்கே ஏறத்தாழ ஆறு கிமீ. தொலைவில் உள்ளது.
நாம மூதூர் மற்றதனுள்
நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின்
சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளியாக்கும்
இரவே யல்ல விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங்
களங்க மின்றி விளங்குமால்.

[ 2]


புகழ்மிக்க பூம்புகலூரில், நல்ல அடியவர்களின் மனம் போல, அவர்கள் அணிந்த பாதுகாப்பான திருநீற்றின் சிறந்த வெண்மையான திருந்திய ஒளியால், யாமங்களின் கொடிய இரு ளைப் பரப்பிடும் இரவு மட்டுமன்று; வாசனையுடைய மலர்மேல் நல்ல அழகிய தேன் உண்ணும் சிறகுடைய வண்டுகளும் தமது கருமையான களங்கமின்றி விளங்கும்.

குறிப்புரை: நாமம் - புகழ். 'பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்' என்றார் முன்பு;(தி. 12 சரு. 1-4 பா. 6) இங்கு, அப் புனிதர்கள் உள்ளம் போல் அணிந்த திருநீறு' என்கின்றார். இங்ஙனம் யாத்திருக்கும் திறம் அறிந்து இன்புறத் தக்கதாகும்.

நண்ணும் இசைதேர் மதுகரங்கள்
நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ
வாச மலர்வா யேயல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும்
சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும்
பதிகச் செழுந்தேன் பொழியுமால்.

[ 3]


பொருந்திய இசையைத் தேர்கின்ற வண்டினங்கள், மலருடைய மென்மையான கொம்பர்களின் அருகில் பறந்திட, இனிமையான தேன் பொழிவன, நறுமணமுடைய அம்மலர்களின் வாய்கள் மட்டுமல்ல; குளிர்ந்த அச்சோலையின் எப்பக்கமும் சார் கின்ற இளமையும் மென்மையும் நிறைந்த நாகணவாய்ப் பறவைகளின் பண்ணிசை பொருந்திய அழகிய வாய்களும், பதிகங்களின் செழுமை மிக்க தேனைப் பொழியும்.

குறிப்புரை: மலர்கள் தேனைப் பொழிவன, நாகணவாய்ப் பறவை களோ, திருப்பதிகங்களாய தேனைப் பொழிவன. முன்னையது உடற்கும், பின்னையது உயிர்க்கும் பயன் தருவனவாம். சாரிகை - நாகணவாய்பறவை. 'தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்' (தி. 12 சரு. 1-3 பா. 8) என்றார் முன்பு, இங்கு அப்பூவைகள் தாமே பாடுகின்றன என்று கூறுகின்றார். எனவே பறவை இனங்களும் பதிகம் பாட வல்லனவாதலை அறிகின்றோம்.

வண்டு பாடப் புனல்தடத்து
மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
துளித்த கண்ணீர் அரும்புமால்.

[ 4]


வண்டுகள் சூழ்ந்து பாடக் குளங்களில் மலர்ந்து கண்ணீர் (கள் + நீர் = கண்ணீர்: தேன்) அரும்புவன, வாசனை கொண்ட முகை அவிழ்ந்து மலர்ந்த குளிர்ந்த தாமரை மலர்கள் மட்டுமேயல்ல, தேவர் பெருமானாம் சிவபெருமானின் திருமுறைத் திருப்பாடல் களின் அமுதம் பெருகிட, அதனைக் காதால் கேட்டு இன்புறும் தொண் டர்களுடைய முகங்களாய தாமரை மலர்களும் துளித்த கண்ணீரை அரும்புவனவாம்.

குறிப்புரை: பூம்புகலூரில் உள்ள தாமரை மலர்களேயன்றித் தொண்டர்களின் முகத்தாமரைகளும் கண்ணீர் பொழிவன எனக்கூறு மாற்றான், அவ்வூரின் இயற்கை வளமும், இறையுணர்வும் ஓருங்கு விளங்குகின்றன. கண்ணீர் என வருவனவற்றுள் முன்னையது தேனை யும் பின்னையது கண்களில் வழியும் நீரையும் குறித்தன.

ஆன பெருமை வளஞ்சிறந்த
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.

[ 5]


இவ்வாறான பெருமையின் வளஞ்சிறந்த புகலூர் எனும் நகரில், பெருமை நிறைந்த மறையவர் குலத்தில் தோன்றியவர், அவர் பழமையான நான்மறைகளின் முதல்வர், ஞானத்தின் முடிவில் நிற்பவர், பாம்பினை அணிந்த சிவபெருமானின் திருவடிக் கீழ் குற்றம் இல்லாத நிறைகின்ற அன்பினால் உருகும் மனத்தினை உடையவர், அவர், முருகனார் எனும் திருப்பெயருடையவர்.
குறிப்புரை: மோனம் என்பது ஞானவரம்பு (கொன்றைவேந். 80) என்பர். எனவே திருவடிகளில் அழுந்தி நிற்பவர் என்பதாம்.

Go to top
அடைமேல் அலவன் துயிலுணர
அலர்செங் கமல வயற்கயல்கள்
மடைமே லுகளுந் திருப்புகலூர்
மன்னி வாழுந் தன்மையராய்
விடைமேல் வருவார்க் காளான
மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச்
சடைமேல் அணியத் திருப்பள்ளித்
தாமம் பறித்துச் சாத்துவார்.

[ 6]


தாமரை இலை மேல் உறங்கிய நண்டு, தனது துயில் நீங்கிட அலரும் செந்தாமரைகள் மலரும் வயலின்கண், கயல் மீன்கள் மடையின் மீது பாய்ந்திட விளங்கும் திருப்புகலூரில் நிலைபெற்று வாழ்கின்றவராய இம்முருகநாயனார், ஆனேற்றின்மீது இவர்ந்து வரும் சிவபெருமானுக்கு ஆளாகின்ற மெய்ம்மைத் தவத்தின் விளைவால், அவர் தொகுதியான திருச்சடை மேல் அணிவதற்கெனத், திருப்பள்ளித் தாமமாய மலர்களைக் கொய்தெடுத்துச் சாத்திவருவா ராய்,
குறிப்புரை:

புலரும் பொழுதின் முன்னெழுந்து
புனித நீரில் மூழ்கிப்போய்
மலருஞ் செவ்வித் தம்பெருமான்
முடிமேல் வான்நீர் ஆறுமதி
உலவு மருங்கு முருகுயிர்க்க
நகைக்கும் பதத்தின் உடன்பறித்த
அலகில் மலர்கள் வெவ்வேறு
திருப்பூங் கூடை களில்அமைப்பார்.


[ 7]


பொழுது விடிவதற்கு முன்பாக எழுந்து, தூய நீரில் மூழ்கிச் சென்று, தம் பெருமானின் திருமுடிமேல் பிறையுலவும் திருச் சடையிடத்து முகையவிழ்ந்து மலர்கின்ற செவ்வி பார்த்து, எடுத்த அள வற்ற மலர்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளில் சேர்ப்பாராய். *** நகைக்கும் பதம் - மலரும் பதம். மலர் பறிப்பார் கொளத்தக்க நியதிகளைச் சிவகாமியாண்டார் வாயிலாக எறிபத்த நாயனார் வரலாற்றில் (தி. 12. ப. 8 பா. 9) விரித்துக் கூறிய ஆசிரியர், இங்குச் சுருங்கக் கூறும் பாங்கு அறியத்தக்கது.
கோட்டு மலரும் நிலமலரும்
குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ்
சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவலரக்
கனக வரையிற் பன்னகநாண்
பூட்டும் ஒருவர் திருமுடிமேல்
புனைய லாகும் மலர்தெரிந்து.

[ 8]


மரத்தின் கொம்பர்களில் மலரும் பூக்களும், நிலத் தில் படர்ந்திருக்கும் செடிகளில் மலரும் பூக்களும், குளிர்ந்த நீரில் மலரும் பூக்களும், செழித்த கொடிகளில் மலரும் பூக்களும், ஆகப் பெருமை பொருந்திய இவ்வகையான மலர்களை எல்லாம், மறைகள் மலரும் திருவாயில் காட்டிடும் சிறந்த புன்முறுவலின் நிலவு அலர்ந் திடக் காட்டி, அம்முறுவலுடன், பாம்பாகும் நாணினைப் பூட்டி, முப் புரம் எரிசெய்த ஒருவராய பூம்புகலூர்ப் பெருமானின் திருமுடிமேல், சூட்டுதற்காம் மலர் வகைகளைத் தெரிந்தெடுத்து,
குறிப்புரை: கோடு - கொம்பு. கோட்டுமலர் - மரங்களிற் பூக்கும் மலர்கள்: கொன்றை, மந்தாரம், வேங்கை, சண்பகம் முதலியன. இதனுள் வில்வமும் அடங்கும். நிலமலர் - செடிகளிற் பூக்கும் மலர்கள்: நந்தியாவட்டம், வெள்ளெருக்கு, அலரி, கரந்தை, தும்பை முதலியன. கொடியின் தோட்டு மலர் - கொடிகளிற் பூக்கும் மலர்கள்: மல்லிகை, முல்லை, சாதி முதலியன. நீர் மலர் - நீரிற் பூக்கும் மலர்கள்: தாமரை, நீலம், செங்கழுநீர் முதலியன.

கொண்டு வந்து தனியிடத்தில்
இருந்து கோக்குங் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமமுடன்
இணைக்கும் வாச மாலைகளுந்
தண்டிற் கட்டுங் கண்ணிகளும்
தாளிற் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டா திறைக்குந் தொடையல்களும்
சமைத்து நுடங்கு நூன்மார்பர்.

[ 9]


நுணங்கும் நூல் அணிந்த திருவுடைய மார்பராய முருகனார், கொண்டு வந்து தனியாக ஓரிடத்தில் இருந்து, கோக்கின்ற கோவை மாலைகளும், இண்டை எனும் சுருக்கு மாலைகளும், மலர் களை இணைக்கும் வாசமலர் மாலைகளும், தண்டு போலக் கட்டும் கண்ணிமாலைகளும், மலர்த்தாள்களைச் சேரக்கட்டும் செறிந்த மாலை களும், நுண்ணிய மகரந்தப்பொடி பறக்கும் மலரினைப் பெருகச் சேரக் கட்டும் பெருமாலைகளும் ஆகக் கட்டி அமைத்து.
குறிப்புரை: கோவை, இண்டை, தாமம், கண்ணி, பிணையல், தொடையல் - இவை மாலைகளின் வகைகளாம்.

ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்  
கமைத்த காலங் களில்அமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ்
சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்
பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும்
ஓவா நாவின் உணர்வினார்.

[ 10]


அவ்விடத்து இவ்வகைகளாலான மாலைகட்டும் பணிகளை உரிய காலங்களில் அமைத்து, அவற்றைச் சுமந்து சென்று அன்பினோடும் இறைவற்குச் சாத்தி, பொருந்திய நல்ல போற்றி யுரைகளை (அர்ச்சனைகளை) முறைப்படி செய்துவந்தார். அப்பணி யோடு அவர் இறைவனின் பதிகப் பற்றாக விளங்கும் சிறந்த திருவைந் தெழுத்தினை ஓவாது நாளும் ஓதி உணரும் நாவினை உடையவர்.
குறிப்புரை: ஆறு காலங்களாவன: (1) உஷக் காலம் - மறைப்பாற்ற லால் மறைக்கப் பட்டிருக்கும் உயிர்களை அம்மறைப்பினின்றும் (இருளினின்றும்) வெளிப்படுத்துங் காலம். (2) உதய காலம் - உயிர்களுக்கு இருவினைத் தொழில்களைக் காட்டி அவற்றில் விடுங் காலம். (3) உச்சிக் காலம் - அவற்றாலாகிய பொருள்களை நுகர்விக்குங் காலம். (4) பிரதோட காலம் - நுகர்ந்ததில் செலவானவை போக மிகுதியைக் கணக்கிட்டு வைக்குங் காலம். (5) சாயுங் காலம்- கணக்கிட்டு வைத்தவற்றை நீக்குங் காலம். (6) அர்த்தயாமம் - தன்வயமிழந்து செயலற்று இருக்குங் காலம். இவ்வாறு விளக்கம் காண்பர் ஆலாலசுந்தரம்பிள்ளையார். பதிகப் பற்றான - திருப்பதிகங் களின் அடிநிலையான, உள்ளுறையான. 'வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே'(தி. 3 ப. 49 பா. 1) என்புழிப் போல, திருப்பதிகங்களின் மெய்ப் பொருளாக விளங்குவது திருவைந்தெழுத்தேயாம். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.

[ 11]


நான்மறைகளில் விலக்கியன ஒழித்து, விதித்தவற்றைச் செய்து ஒழுகி வரும் அந்தணர் பெருமானாகிய முருக நாயனார் தாமும், உலகிற்கு உண்மைப் பொருளைத் தெளிவிக்கும் மறைகளில் முதன்மையாகக் கூறப்பட்டிருக்கும் சிவஞானத்தைச் செம்பொன் வள்ளத்தில் எடுத்து, உலகம் யாவற்றையும் பெற்றுக் காத்து வரும் உமையம்மையாரின் திருமுலைப்பாலுடன் சேர உண்ட திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராகின்ற பெருமையும் உடையவரானார்.
குறிப்புரை:

அன்ன வடிவும் ஏனமுமாய்
அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை
வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள
நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும்
பயின்றே பணிந்து பரவினார்.

[ 12]


அவர், அன்னப் பறவையின் வடிவும் பன்றியின் வடிவும் கொண்டு அறியத் தலைப்பட்ட அயனும், மாலும் ஆகிய இருவரும் அறியாதவாறு நீண்ட ஒளிவடிவாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரம் என்னும் திருக்கோயிலுக்குள் சென்று, அப்பெருமானைத் தமது உள்ளத்து எழும் நல்ல மகிழ்ச்சியுடைய மனம் கொள்ள, நாள்தோறும் மலர் மாலை தொடுத்து அணிவித்துச் செய்து வரும் வழிபாட்டைத் தவறின்றி நிகழ்த்தியும், பெருமையுடைய திருவைந்தெழுத்தை ஓதியும் வணங்கி வருவாராயினார்.

குறிப்புரை: வர்த்தமானீச்சரம் - திருப்புகலூர்த் திருக்கோயிலில் இறைவர் கோவிலின் வட கிழக்கில் உள்ள தனிக்கோயில். இது முருக நாயனார் வழிபட்டு வந்த திருக்கோயிலாகும்.
இத் திருக்கோயிலில் முருக நாயனார், திருமாலை தொடுத்து நிற்கும் திருவுருவம் உள்ளது.

அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.

[ 13]


அவ்விடத்து வாழ்கின்ற முருக நாயனார் அழகிய சீகாழியில் தோன்றிய திருஞானசம்பந்தரின் சிவம் பெருக்கும் திரு மணத்தில், தாம் முன் செய்த பூசையின் விளைவால் புகுந்தருளி, சிவந்த கண்களை உடைய ஆனேற்றின் மீது அமர்ந்தருளும் பெருமானின் சிறந்த பொருளாகிய திருவருட் பேற்றை வழங்கும் அப் பெருமானின் திருவடிநிழற்கீழ்ச் சென்று பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார்.
குறிப்புரை:

அரவம் அணிந்த அரையாரை
அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார்
மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக்
கரவில் அவர்பால் வருவாரைக்
கருத்தில் உருத்தி ரங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார்
பணிந்த பெருமை பகர்வுற்றேன்.

[ 14]


பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக, அவருடைய திருவடிநிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறி யினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார் பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.
குறிப்புரை:


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song